ஒரு படம்

ஒக்ரோபர் 2, 2006

ஆணிவேர்

Filed under: Movie Review,Tamil Movie — CAPitalZ @ 12:20 பிப

ஆணிவேர்

எனது வரிசையின் இருமருங்கிலும் வெள்ளைக்காரங்கள் உட்கார்ந்து இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. அட வெள்ளைக்காரங்களும் வந்திருக்கிறார்கள் நம்ம படத்தைப் பார்க்க என்று.

படத்தின் தொடக்கத்தில் எழுத்தில் ஏதேதோ போட்டார்கள். அதை வாசித்து முடிப்பதற்குள் அவை மறைந்து விட்டன.

படத்தின் பெயரோட்டத்தில் கறுப்பு வெள்ளை நிறத்தில் மற்றய சுதந்திர போராட்டங்கள் காட்டப்படுகிறது. சே, பிடல் காஸ்றோ, மற்றும் நெல்சன் மண்டேலா என்று எல்லாறையும் காட்டுகிறார்கள். மகாத்மா காந்தியைக் காட்டியதாக ஞாபகம் இல்லை.

படம் தொடங்கவும் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த வெள்ளையர்கள் எழும்பிப் போனார்கள். அவர்கள் படம் மாறி வந்து உட்கார்ந்து விட்டார்கள். ஆங்கில/ஃபிரென்ஞ்சு subtitle கொடுத்திருந்தால் இருந்திருப்பார்களோ என்னமோ தெரியாது.

படத்தின் தொடக்கத்திலேயே கோர தாண்டவத்தைக் காட்டுகிறார்கள். இதை இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்துக் காட்டி இருக்கலாம். ஆனால், தொடங்கிய விதம் சரியாகத் தான் இருந்தது.

இராணுவத்தால் மக்கள் படும் பல துன்பங்களை கதையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர். புலிகளின் நிதர்சனம் வீடியோ பிரதியில் வருவது போல் அகோரமான காட்சிகளைக் காட்டாமலேயே உண்மையை உணர்த்தி இருக்கிறார்.

என்னைத் தொட்ட கட்டம்:
கதாநாயகனையும் [தமிழீழத் தமிழன்], கதாநாயகியையும் [இந்தியத் தமிழிச்சி] இலங்கை இராணுவம் செம அடி அடித்து விட்டுச் செல்லும். காயங்களுடன் இருக்கும் மதுமிதாவைப் பார்த்து, நந்தா சொல்வார் “Welcome to Jaffna”.

இந்தப் படம் இந்திய மக்களுக்காகவே எடுக்கப்பட்டதாகத் தான் உணர்கிறேன். மதுமிதாவை கேட்கும் கேள்விகளில் அது வெளிச்சம். நந்தாவின் மதுமிதா மீதான கோபமான் கேள்விகள் அடிமேல் அடி அடித்து இனித் துன்பம் வலிக்காது என்று போன மக்களின் கோபக் கனல்களாக தெறிக்கிறது. படு துன்பத்தில் வருமே ஒரு கோபம் அப்படி.

அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் நந்தா கப்பலோடு இறந்து போனவர்களை பார்த்துவிட்டு படம் பார்க்கிறவர்களை பார்த்து கேள்வி கேட்பார். “குழந்தைகள் தத்தளிக்கும்போது காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?” இது இந்திய கடலில் தத்தளித்து இறந்த தமிழர்களை வேடிக்கை பார்த்த இந்தியாவிற்காக. கடைசியாக அக் கேள்விகள் கடவுளுக்கு கேட்கப்படுவதாக முடிப்பார்.

மக்களின் இடப்பெயர்வை நிஜமாக காட்டி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு தொடங்கு கோட்டிலிருந்து நடக்க ஆரம்பிப்பது போல் முன்னுக்கு செல்பவர்கள் ஒரு நேர் வரிசையில் செல்கிறார்கள். இதை மட்டும் கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடப்பெயர்வை காட்டியது போல் இடையிலிருந்து காட்டி இருக்கலாம். எல்லோரும் தொப்பியும் போட்டிருந்தார்கள். எனக்கு அப்படி ஞாபகம் இல்லை.

படம் முடிந்த பின் பெயரோட்டம் போடும்போது முழுக்க முழுக்க தமிழிலேயே போடப்படுவது தமிழீழ பாணியை கையாண்டிருப்பதைக் காட்டுகிறது. ஆனால், ஒரு இடத்தில் நந்தா ஆவேசப் பட்டுப் மக்கள் முன்னிலையில் பேசுவார். அதில் அவர் முழுமையான வசனங்களில் சுத்தத் தமிழில் பேசுவார். இப்படி யாரும் அங்கு பேசுவதாக எனக்கு ஞாபகம் இல்லை.

இந்தப் படத்தை இன்னுமொரு விதமாக, உவமையாக மறைந்திருக்கும் கருத்தாகவும் பார்க்கிறேன். மதுமிதா முதல் தடவை யாழ்ப்பாணம் வரும்போது, தமிழ் மக்களை சரியாகப் புரிந்து கொள்ளாதவ. மீண்டும் இந்தியா சென்று பல காலங்களுக்குப் பின் திரும்பவும் யாழ் வருகிறா. நந்தா சொல்வார், இன்னும் கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பது நீயும் நானும் பிரியக்கூடாது என்பதற்காகத் தான் என்னவோ. விளங்குதா இலை மறை காயாக இருப்பது?

சரி, மதுமிதா நன்றாகவே செய்திருக்கிறார். நந்தாவும் நன்றாகத் தான் செய்திருக்கிறார். கோபப்படும்போது மக்களின் குமுறல்களை வெளிக்கொணர்ந்து இருக்கிறார். இருந்தாலும் ஒரு தமிழராக இல்லாமல் [தெலுங்கு காறி] இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்று தெரிந்தும் சம்பளம் ஏதும் பேரம் பேசாமல் நடித்து இருக்கிறாரே. அதற்காகவே அவருக்கு நன்றி சொல்லலாம். நந்தா தானாகவே முன்வந்ததற்காக அவருக்கும் ஒரு நன்றி.

இசை மிக அருமை

இயக்குனருடனான நேர்காணலை இங்கே பார்க்கலாம்: ஆணிவேர் – ஜான்

சேர்க்கப்பட்டது I:   2006/10/17 @ 8:48 PM [GMT -5]
தொப்புழ் கொடி உறவை சுட்டிக்காட்டவோ என்னவோ தமிழ் நாட்டிலிருந்து வருபவர் பெண்ணாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisements

செப்ரெம்பர் 21, 2006

காதலே என் காதலே

Filed under: Tamil Movie — CAPitalZ @ 12:34 பிப

♩ ♬  காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் – நீ
என் கண்ணிரண்டைக் கேட்கிறாய்  ♬ ♩

பட video cassete ஐ எடுத்துப் போடும்போது நினைவுக்கு வந்த வரிகள் [இந்தப் பாடல் இந்தப் படப் பாடல் அல்ல]. படம் முழுக்க அந்த இசையின் தழுவல் இருப்பதாக நான் உணர்கிறேன்.

இந்தப் படத்திற்கு “சில்லென்று ஒரு காதல்” என்று பெயர் வைத்திருக்கலாம் போலும். மிக மிக மென்மையாக ஒரு முக்கோண காதல் கதை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எந்த காது வெடிக்கும் இசையோ பாடல்களோ இல்லாமல், வெகு மென்மையான இசையில் படம்.

ஒரு சண்டை கூட படத்தில் இல்லை.

படத்தை பார்த்து முடித்தும் மனதில் ஏதோ ஒரு உணர்ச்சி உருண்டுகொண்டிருந்தது.

ஏற்கனவே அறிந்த கதை தான், இருந்தாலும் பார்க்கலாம். அவ்வளவு இரசிக்கத்தக்கதாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதலிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஜோடியாய் போய்ப் பார்க்கலாம்.

பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன. இசையமைப்பாளருக்கு ஒர் கைதட்டல்.
திரை அரங்கில் பார்த்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

______
CAPital

செப்ரெம்பர் 20, 2006

சில்லென்று ஒரு காதல்

Filed under: Tamil Movie — CAPitalZ @ 9:21 பிப

சில்லென்று ஒரு காதல்.  நானும் ஏதோ ஒரு மென்மையான காதல் கதையாய் இருக்கும் என்று video cassette ஐப் போட்டு பார்த்தன்.  கலியாணம் கட்டியவர்கள் தான் பார்க்கவேண்டிய படம் போல கிடக்குது.

என்னென்றாலும், ஜோதிகா, பூமிகாவுடன் ஒரு நாளை செலவழி என்று சொல்லி சூர்யாவிடம் விட்டுட்டு போக அவர் அதற்கு பெரிதாக ஒன்றும் எதிர்ப்புக் காட்டாமல் ஆமோதிப்பது என் பார்வைக்கு முற்றுமுழுதாக பிழையாகத் தெரிகிறது.

பூமிகா கேட்டு, கடைசி ஆசை (அ) ஜோதிகாவிடம் கெஞ்சி சூர்வை சம்மதிக்க வைச்சு “ஒரு நாள்” ஐ சிலவழிக்க ஒத்துக்கொண்டிருந்தால் சூர்யா நல்லவராக பட்டிருப்பார்.  பூமிகாவுக்கு எதாவது பெரிய வருத்தம் இருப்பதாகவும் காட்டி இருக்கலாம்.

மனைவி ஏதோ கேட்கிறாள் என்றால், இவரும் ஆமாம் என்று கழத்தில் இறங்குகிறார்.  நியாயமாக, இவர் ஜோதிகாவை தடுத்து நிறுத்தி இதற்கு ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது.  இவரும் சம்மதித்து, பூமிகாவுடன் தனியாக இருக்க, அவள் நல்லவளாக இருந்ததால் ஏதும் நடக்கவில்லை.  இதில் பூமிகா தான் நல்லவளாக தெரிகிறார்.

சூர்யாவிற்கு தப்பு செய்ய மனைவி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து, பூமிகா நல்லவராக இருந்ததால் தப்பு ஏதும் நடக்கவில்லை என்று தான் படத்தில் விளங்குகிறது.

_____
CAPital

ஓகஸ்ட் 28, 2006

வேட்டையாடு விளையாடு

Filed under: Movie Review,Tamil Movie — CAPitalZ @ 1:56 பிப

பார்த்துவிட்டேன்.

தமிழ் படம் பார்க்க என்று போகிறவர்களுக்கு சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கும்.

ஒற்றை வரியில் சொல்வதென்றால், இது ஒரு மர்மம் கலந்த கதை. என்னும் சொல்லலாம், சொன்னால் மர்மம் இல்லாமல் போய்விடும்.

ஒரு ஆங்கில பட விதத்தில் எடுத்து இருக்கிறார்கள். மர்மக் கதை தமிழ் சினிமாவில் பல காலம் கழித்து. நான் படத்திற்கு போகும்போதே இரண்டு பட விமர்சனம் வாசித்தேன். ஒருவர் மிக நன்றென்றார், மற்றவர் அவ்வளவு திறம் இல்லை என்றார். முன்னவர் வெளிநாட்டுக்காரர், பின்னவர் இந்தியாவில் வசிப்பவர். அப்போதே விளங்கி விட்டது, இது தமிழ் சினிமா பாணி அல்ல என்று.

ஆங்கிலம் அதிகமாகவே பேசப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், ஆங்கில படங்களில் வருமே ஒரு கெட்ட வார்த்தை அடிக்கடி. தமிழ் படத்தில் இதில் தான் நான் முதன் முதலில் கேட்கிறேன். இடங்களின் பெயர் என்று எழுத்துக்களில் போடும்போது எல்லாம் ஆங்கிலத்திலேயே போடுகிறார்கள். நான் நினைக்கிறேன் இது பல மொழிகளில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்று சிந்தித்து இப்படி செய்திருக்கிறார்கள் என்று. கொடுமை என்னவென்றால், ஆங்கிலம் கதைக்கும்போது எழுத்துக்களாக தமிழில் போடுகிறார்கள். ஐயா அது தமிழா என்று பார்த்து யாராச்சும் சொல்லுங்கோ. சென்னைத் தமிழோ?! ஆங்கில பாடல்களில் வருவதுபோல் கறுப்பிகளின் ஆட்டமும் இருக்குங்கோ 😉 இது வெளிநாட்டுக்காரர்களுக்கு என்றே எடுக்கப்பட்டது போல் இருக்கு.

கமல்காஸனின் படம் எதாவது வித்தியாசமாக மனுசன் செஞ்சிருப்பார் என்று எதிர்பார்ப்போடும் போகாதீர்கள். கமல்காஸனைப் பிடிக்காதவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி. ஆனால் கமலுக்கே பிடித்த ஒரு பாத்திரமும் இருக்கு (மனநொயாளி[கள்])

சரி படத்தின் முதல் பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி இருந்தது. தமிழ் சினிமாவில் பாதாளத்தில் இருக்கும் காவல்துறையை தூக்கி நிமிர்த்திக் காட்டுகிறேன் என்று தான் கௌதம் ஒரு முடிவோடு இருக்கிறார் போலும். தமிழ் சினிமாவின் துப்பாக்கி சூட்டு சண்டைக்கும் அமெரிக்க சினிமாவின் துப்பாக்கி சூட்டுச் சண்டைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இவ்வளவு காலமும் இருந்தது. கௌதம் சரி செய்து விட்டார். சகல பாடல்களும் ரசிக்கத்தக்கவை. இடையில் ஒரு குத்தாட்டம் போல் ஒரு பாடல் வரும். இனிமை தான் இருந்தாலும் கதைக்கு தேவையில்லை என்பது எனது எண்ணம்.

ஊடலில் கமலைப் பற்றி சொல்லவா வேண்டும். மனைவியை அறிமுகப் படுத்தும்போது மனைவி சொல்வார் “இவர் சாப்பாட்டில் மட்டும் தான் வீக் …”. ஐயோ…, கயல்விழி [கமலின் மனைவியாக வருபவர்], கொல்லுராங்க 😉

_____
CAPital

இம்சை அரசன் 23ம் புலிகேசி

Filed under: Movie Review,Tamil Movie — CAPitalZ @ 1:53 பிப

நான் நேற்று முன் தினம் படத்தைப் பார்த்தேன். இரவு 10 மணி காட்சி என்பதால், திரை நிறையவில்லை, இருந்தாலும் சுமாராக வந்திருந்தார்கள்.

வடிவேலு தான் படத்தில் வெழுத்து வாங்கி இருக்கிறார். தன்னாலும் serias ஆக நடிக்க இயலும் என்று நிரூபித்திருக்கிறார். வடிவேலுவா இப்படி நடிக்கிறார் என்று ஏங்க வைத்துவிட்டார்.

அது சரி வடிவேலுவுக்கு இவ்வளவு figures… ஐயோ.. கொஞ்சம் பொறாமையா இருக்கு 😦

படம் முழுக்க செயல்முறை பகிடிகள் [அது தான் வடிவேல்]. இருந்தாலும் நான் அளவுக்கதிகமாக எதிர்பார்த்து விட்டேனோ தெரியவில்லை, எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை.
கமல்காஸனின் பகிடி படங்களைப் போல் படம் முழுக்க சிரிக்க முடியவில்லை.

காதல் பாட்டுகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இப்படி ஒரு படம் எடுக்க தோன்றிய இயக்குனருக்கும், அதை ஆதரித்த தயாரிப்பாளருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

எனக்கு மிகவும் பிடித்த கட்டம்: புலிகேசி அரண்மை வாயிலில் கதவிற்கு பின்னால் நிற்பார். எதிர்புரத்தில் இவருடன் போர் செய்ய எதிரிப் படை. புலிகேசி கதவில் இருக்கும் ஒரு துவாரத்தை அடைக்கும் அந்த மட்டையை சுழற்று சுழற்று என்று சுழற்றிக் கொண்டிருப்பார். நிற்கிற ஸ்ரைல் யோசிக்கிற விதம் மிகவும் பிடித்திருந்தது.

______
CAPital

Create a free website or blog at WordPress.com.